உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாக்கடையை கடந்து செல்லும் மாணவர்கள் தோல் நோய்கள் ஏற்படும் அவல நிலை

சாக்கடையை கடந்து செல்லும் மாணவர்கள் தோல் நோய்கள் ஏற்படும் அவல நிலை

விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் ஓடும் சாக்கடை நீரை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. விருத்தாசலம் கடலூர் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும், பெண்ணாடம் ரோடு காந்திநகரில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியும் உள்ளது. இந்த பள்ளிகளில் நகரத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். பெரியார்நகர், ஆலடிரோடு, பூதாமூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாலக்கரை அருகில் செல்லியம்மன் கோவில் வழியாக மணிமுக்தா ஆற்றை கடந்து குறுக்கு வழியில் பள்ளிக்கு நடந்தே செல்வர். அதுபோல் காந்திநகர், சாவடிக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆற்றை கடந்து வந்து படித்து செல்வார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் காய்கறி சந்தைக்கு வரவும், பல்வேறு பணிகளுக்கும் இந்த மணிமுக்தா ஆற்றை கடந்து செல்லியம்மன் கோவில் வழியாகவே வந்து செல்வார்கள். இந்த மணிமுக்தா ஆற்றின் ஓரத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே கழிவுநீர் ஓடி வருகிறது. இதனால் ஆற்றைக் கடந்து குறுக்கு வழியில் செல்பவர்கள் இந்த சாக்கடையில் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது. மாணவ - மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளதுடன், கால் பகுதியில் தோல் நோய்கள் உண்டாகவும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் பொதுமக்களும், மாணவர்களும் தினமும் இந்த வழியை பயன்படுத்தி நடந்து செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமாவது குழாய் அமைத்து, சாக்கடை நீரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ