| ADDED : ஜூலை 11, 2011 11:10 PM
சிதம்பரம் : சிதம்பரத்தில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என அரசுக்கு சமாஜ் வாடி கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கை: சிதம்பரம் நகரில் புகழ்பெற்ற நடராஜர் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து தங்குகின்றனர். இந்நிலையில் முறையான சாக்கடை வசதி இல்லாமல் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு பாதிப்படைந்து வருவதால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சிதம்பரத்தில் 1969ல் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் நகர வளர்ச்சியால் அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களுடன் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆட்சியில் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பின் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஆன்மிக தலமாக உள்ள சிதம்பரம் நகரை எழில் நிறைந்த நகரமாக மாற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.