| ADDED : ஜூலை 11, 2011 11:06 PM
கடலூர் : மாவட்டத்தில் கருங்கல், செம்மண் கடத்திய 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கனிமங்கள் கடத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் வருவாய் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி கடலூரில் தாசில்தார் அசோகன், துணை தாசில்தார் சிவா, வருவாய் ஆய்வாளர் மகேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில், காலாவதியான அனுமதி சீட்டை பயன்படுத்தி செம்மண் கடத்திய லாரியை திருச்சோபுரத்திலும், விழுப்புரம் மாவட்டம் வானூரில் இருந்து நாகை மாவட்டம் சீர்காழிக்கு கருங்கல் கடத்திச் சென்ற லாரி மற்றும் நேரம் தவறி மணல் ஏற்றிச் சென்ற இரண்டு மாண்டு வண்டிகளை பறிமுதல் செய்து மேல் விசாரணைக்காக ஆர்.டி.ஓ., முருகேசனுக்கு பரிந்துரை செய்தனர்.
விருத்தாசலம்: தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் வேலு, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடியப்பட்டு, பாலக்கொல்லை மற்றும் கொட்டாரக்குப்பத்தில் இருந்து அனுமதியின்றி கூழாங்கற்களை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றிச் சென்ற ஏழு லாரிகளை பறிமுதல் செய்து மேல் விசாரணைக்காக ஆர்.டி.ஓ., ஆனந்த குமாருக்கு பரிந்துரை செய்தனர்.