| ADDED : ஜூலை 04, 2024 11:45 PM
கடலுார் : கடலுார் மாவட்ட அதிதிராவிட நல பள்ளிகளில் காலியாக உள்ள 88 இடைநிலை ஆசிரியர்கள், 18 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடகள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்படுகின்றனர்.இவர்கள் தொகுப்பூதியம் முறையில் தற்காலிகப் பணியாகவும் நிபந்தனையின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000 வீதமும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 வீதம் வழகப்படும்.18 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் பேப்பர் 2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்பணி 88 காலி பணியிடங்களுக்கு இடைநிலை வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வு டெட் பேப்பர் 1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளை பின்பற்றி, வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றிருக்க வேண்டும். பள்ளி உள்ள எல்லைக்குள் வசிப்பவராகவும் அல்லது அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2025 வரை மட்டுமே பணிக்கு நியமிக்கப்படுவர். கடலுார் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள காலி பணி இடங்களை அறிந்து, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வி தகுதிச்சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலம் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 7ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.