| ADDED : ஏப் 24, 2024 02:15 AM
கடலுார்:ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கில் அவதுாறு கருத்து வெளியிட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரிமானியத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்,46; பா.ம.க., ஆதரவாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகரான கலைமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி ஓட்டு போட்டுவிட்டு வந்த ஜெயக்குமாரின் தம்பி மகள் ஜெயப்பிரியாவை, கலைமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேலி செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயக்குமாரின் மனைவி கோமதி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து கலைமணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வருகின்றனர்.இந்நிலையில், கோமதி கொலை குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக தி.மு.க.,வினர் இந்த பாதக செயலை செய்திருப்பதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.கோமதி இறப்பு குறித்து அவதுாறு கருத்து வெளியிட்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தி.மு.க., நிர்வாகி சாமிநாதன், ஸ்ரீமுஷ்ணம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.