| ADDED : ஜூலை 30, 2024 11:12 PM
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே என்.எல்.சி., அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கோபாலபுரம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், கடந்த 2000ம் ஆண்டு முதல், 2013 வரை என்.எல்.சி., நிர்வாகம் நிலம் கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களுக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டி நில உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களில் கம்பி வேலி அமைக்க நேற்று முயன்றனர். இதையறிந்த கிராம மக்கள் விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில், என்.எல்.சி., அதிகாரிகளை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கம்மாபுரம் போலீசார், பேச்சு நடத்தினர். அதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து, என்.எல்.சி., அதிகாரிகள் கம்பி வேலி அமைக்கும் பணியை கைவிட்டு திரும்பினர்.