| ADDED : ஆக 10, 2024 05:52 AM
புவனகிரி: புவனகிரி ஆதிவராகநல்லுார் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசை வலியுறுத்தி புவனகிரி வர்த்தகர் சங்கம் சார்பில் வரும் 13 ம் தேதி காலை 11.00 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. புவனகிரி அகே ஆதிவராகநல்லுார் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், விவசாயத்தை பாதுகாக்கவும், புவனகிரி வர்த்தக சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் அப்போதைய எம்.எல்.ஏ., சரவணன் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். கடலுார் மாவட்டத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியும் தடுப்பணை கட்டப்படும் என உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன்,அருண்மொழிதேவன் சட்டசபையில் வியுறுத்தி பேசியுள்ளனர். இருந்தும் தற்போதைய அரசும் கண்டு கொள்ள வில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே வெள்ளாற்றில் ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புவனகிரி வர்த்த சங்கத்தினர் வரும் 13 ம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காலை 11.00 மணிவரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.