விருத்தாசலம் : பா.ஜ., கட்சியினருக்கு பட்ஜெட் போட தெரியவில்லை என, காங்., மாஜி., மாநில தலைவர் அழகிரி பேசினர். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில், காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலர்கள் சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ரஞ்சித் வரவேற்றார்.இதில், முன்னாள் மாநில தலைவர் அழகிரி கலந்துகொண்டு பேசுகையில், காங்., கட்சி ஆட்சியில் இருந்தபோது, மக்கள் தொகை அடிப்படையில் நிதி பங்கீடு செய்து கொடுத்தது. முன்னாள் பா.ஜ., பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், சரண்சிங் போன்றோர் பாகுபாடின்றி நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுத்தனர்.ஆனால், பிரதமர் மோடி, தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களை முழுமையாக புறக்கணித்துள்ளார். பட்ஜெட்டில் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆட்சியிலும் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டது இல்லை.நுாறுநாள் வேலை திட்டத்திற்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. நுாறுநாள் வேலை திட்டத்தை சட்டமாக மாற்றியது காங்., அரசு. கடந்தாண்டு உணவு பொருட்களின் விலை 6.7 சதவீதம் உயர்ந்திருந்தது. அதேபோல், நடப்பாண்டு பட்ஜெட்டில் அத்தியாவசியம் மற்றும் உணவு பொருட்களின் விலை 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பா.ஜ., வினருக்கு பட்ஜெட் போட தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் காங்., கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.