| ADDED : மே 02, 2024 11:20 PM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கிராமங்களுக்கு செல்லும் வாய்க்கால் பாலம் வலுவிழந்து உடைந்து விழும் நிலையில் இருப்பதால், 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் -சேத்தியாத்தோப்பு சாலையில், கத்தாழை பஸ் நிறுத்தம் அருகே விளக்கப்பாடி செல்லும் சாலையில், 35 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. அதன் வழியாக சாத்தப்பாடி, விளக்கப்பாடி, முகந்தரியங்குப்பம், தட்டானோடை, பெறுவரப்பூர், அகரஆலம்பாடி உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பாலம் பராமரிப்பின்றி துாண்கள், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. பாலமும் வலுவிழந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள் விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போக்குரவத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது.இந்த பாலத்தை பழுது நீக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தால், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாலம் என, தட்டி கழிக்கின்றனர்.எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பாலத்தினை இடித்துவிட்டு புதிய பாலம் உறுதியாக கட்டித்தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.