திட்டக்குடி : கடலுார் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான திட்டக்குடியில், 2013ம் ஆண்டில் பல்கலைக்கழக உறுப்புக்கல்லுாரி துவங்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதையடுத்து, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கல்லுாரி துவங்கப்பட்டது. பின்னர், 2015ல், ரூ. 8 கோடி மதிப்பில் புதியதாக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டு கல்லுாரி இயங்கி வருகிறது.ஐந்து இளங்கலை பிரிவுகளுடன் துவங்கப்பட்ட கல்லுாரி, தற்போது 10 இளங்கலை பிரிவுகள் மற்றும் நான்கு முதுகலை பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், சேலம், நாமக்கல், தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இக்கல்லுாரி மாணவர்கள் கபடி, கோேகா, கால்பந்து, கூடைப்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.கல்லுாரி துவங்கி 10ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கல்லுாரியில் விளையாட்டு மைதானம் இல்லாதது குறையாக உள்ளது. இக்கல்லுாரி வளாகத்திலேயே விளையாட்டு மைதானம் அமைக்க 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்ட இடம் பயன்படுத்தப்படாமல், புதர்மண்டி கிடக்கிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வம் உள்ள மாணவர்கள் பயிற்சி செய்ய இடமின்றி அவதிப்படுகின்றனர். எனவே, திட்டக்குடி கல்லுாரி விளையாட்டு மைதானம் உருவாக்கி, உபகரணங்கள் வழங்கினால் அரசு கல்லுாரி மாணவர்கள் விளையாட்டிலும் மேலும் சாதனைகளை புரிய வாய்ப்பு கிடைக்கும்.
மினி ஸ்டேடியம் அமைக்க ஆலோசனை
திட்டக்குடி அரசுக்கல்லுாரியில் விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் புதர்மண்டியுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவித்த தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் திட்டத்தின் கீழ், இங்கு, மினி ஸ்டேடியம் அமைக்கலாம். தொகுதியின் மையத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சியில் போதிய இடம், போக்குவரத்து வசதி உள்ள இந்த இடத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.