| ADDED : ஆக 14, 2024 06:04 AM
கடலுார்,: கடலுார் அருகே ஏர் ஹாரன் அடித்து வந்த தனியார் பஸ் டிரைவரை, இயக்குனர் சேரன் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன், நேற்று புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி, காரில் வந்து கொண்டிருந்தார். கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் அருகே வந்தபோது, பின்னால், புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் டிரைவர், சேரன் காரை முந்துவதற்காக தொடர்ந்து ஏர் ஹாரன் அடித்தபடி வந்தார்.ஆத்திரமடைந்த சேரன், காரை திடீரென நடுரோட்டில் நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி, தனியார் பஸ் டிரைவரிடம் எதற்காக தொடர்ந்து ஏர் ஹாரன் அடித்தாய்? எப்படி மற்றவர்கள் வாகனத்தை ஓட்டுவது என சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதைக்கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சேரனுக்கு ஆதரவாக, பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கடலுார்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, ஏர் ஹாரன் ஒலி எழுப்பக்கூடாது என தனியார் பஸ் டிரைவரை கண்டித்துவிட்டு, சேரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.