| ADDED : ஏப் 20, 2024 04:57 AM
பெண்ணாடம் : ஓட்டுச்சாவடி மையத்தில் தேர்தல் அலுவலராக தி.மு.க., ஐ.டி., விங் நிர்வாகி பணி புரிந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.கடலுார் லோக்சபா தொகுதியை சேர்ந்த பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் உள்ள அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் நேற்று காலை 6:30 மணிக்கு அனைத்து கட்சியினர் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.அப்போது அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் ஓட்டுச்சாவடி அலுவலர் ் பணியில் இருந்த சக்திவேலை பார்த்து நீங்கள் தி.மு.க., ஐ.டி., விங் நிர்வாகி. எப்படி இந்த பணிக்கு வந்தீர்கள் என கேட்க அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தபடி அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்ததில், ஓட்டுச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி அடுத்த வேங்கடாம்பேட்டை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழேந்தல் உடல்நிலை சரியில்லாததால் பணிக்கு வரமுடியவில்லை என மண்டல தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தி.மு.க., ஐ.டி., விங்கை சேர்ந்த சக்திவேல், ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் சக்திவேல் என்ற பெயரில் ஓட்டுச்சாவடி அலுவலராக பணியில் இருந்தது தெரிய வந்தது.ஓட்டுச்சாவடி அலுவலராக சக்திவேல் எப்படி பணிக்கு வந்தார் என்பது குறித்து மண்டல தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.