| ADDED : மே 27, 2024 05:41 AM
சிதம்பரம்: சிதம்பரம் ஆணிக்காரன் தெருவில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி, தில்லை காளி, கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் அர்ச்சனை மற்றும் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, 24ம் தேதி சக்தி கரகம் எடுத்தல், யாகசாலை பிரவேசம் நடந்தது. பின், முதல் கால யாக சாலை பூஜை ,விசேஷ ஹோமம், தீபாராதனை நடந்தது.25ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. துர்கா சகஸ்ரநாம அர்ச்சனை, மாரியம்மன் மூல மந்திர ஹோமம், ருத்ர ஹோமம் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாக சாலை பூஜை, தொடர்ந்து மேள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடந்து, மகா மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா முத்துமாரியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நேற்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது.