| ADDED : ஆக 16, 2024 11:13 PM
பெண்ணாடம்: சுதந்திர தினத்தையொட்டி, பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் தனம் துரைசாமி தலைமை தாங்கினார். நல்லுார் ஒன்றிய பற்றாளர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த மாதம் 9ம் தேதி விருத்தாசலம் ஊராட்சிகளின் உதவி இயக்குனரிடம் இருந்து, பெ.பொன்னேரி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த ஏதுவாக ஊராட்சியில் தீர்மானம் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்க ஊராட்சி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதுதொடர்பான கருத்துகேட்பு குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் மத்திய அரசின் திட்ட நிதிகள், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், நுாறு நாள் வேலை ரத்து, வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் வரிகள் போன்றவை உயரும் எனவும், இதனால் பெ.பொன்னேரி ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்தக்கூடாது என ஊராட்சி தலைவரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அதனை ஊராட்சியின் தீர்மானத்தில் பதிவேற்றப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் பெ.பொன்னேரி ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.