| ADDED : ஏப் 11, 2024 11:57 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, அப்பகுதி மக்களின் அச்ச உணர்வை போக்கும் வகையில், துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. அதன்படி, விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், பெரியார் நகர், புதுக்குப்பம், எருமனுார், மணவாளநல்லுார், சாத்தியம் உள்ளிட்ட பகுதிகள் பதற்றமான ஓட்டுசாவடி மையங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பதற்றமான ஓட்டுசாவடி மையங்களில் ஒன்றான குப்பநத்தம் புதிய காலனி மற்றும் பழைய காலனியில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. இதனை, விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், துணை ராணுவ வீரர்கள் 40 பேர் மற்றும் உள்ளூர் போலீசார், தனிப்பிரிவு தலைமைக் காவலர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.