மந்தாரக்குப்பம்: நெய்வேலி வட்டாரத்தில் கிராம பகுதிகளுக்கு போதுமான பஸ் வசதி இல்லாமல், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நெய்வேலியில் என்.எல்.சி., அனல்மின்நிலையம், சுரங்கங்கள், தலைமை அலுவலகம், நிர்வாக அலுவலகம், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல இயங்கி வருகின்றன.இங்கு வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் ஒடிசா, பீகார், ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் இருந்து அருகில் உள்ள மந்தாரக்குப்பம், வடலுார், இந்திராநகர், முத்தாண்டிகுப்பம், அரசக்குழி, ஊமங்கலம், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பஸ்கள் மிகவும் குறைவாக உள்ளன.அரசு போக்குவரத்துக் கழகம், என்.எல்.சி., சார்பில் நெய்வேலி டவுன்ஷிப்- மந்தாரக்குப்பம், இந்திராநகர், திடீர்குப்பம் பகுதிக்கு மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.தற்போது கோடைவிடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் பல மணிநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் கிராமப்புற மக்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் சரியான நேரத்தில் செல்ல வசதியாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.