| ADDED : ஜூலை 18, 2024 11:24 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பழுதடைந்த வடிகால் பாலம் கட்டாமல், சாலை போடுவதாக எழுந்த புகாரின்பேரில், அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.சேத்ததியாத்தோப்பு அருகே ஆணைவாரி கிராமத்தில் வெள்ள காலங்களில் மழைவெள்ள நீர் வடியும் பாலம் கடந்த 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வடிகால் பாலம் வழியாக கிராமத்தில் உள்ள அனைத்து பகுதி மழைநீர் வடிந்து செல்கிறது. இந்நிலையில், கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறையினர் புதிய தார்சாலை போட்டு வருகின்றனர்.இந்த வடிகால் பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டிய பிறகு சாலை அமைக்குமாறு கூறி, பணியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து புகாரின்பேரில், தொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் நேற்று பழுதடைந்துள்ள வடிகால் பாலத்தை ஆய்வு செய்தார்.அப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் எம்.எல்.ஏ., தொடர்பு கொண்டு, பழுதடைந்த வடிகால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும், எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணியை தொடர வேண்டும் எனகூறினார்.ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர் அரங்கசாமி, ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, அண்ணாதுரை, சாமிநாதன், பிரகாஷ் உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் உடனிருந்தனர்.