விருத்தாசலம் : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவினர், விருத்தாசலத்திற்கு வந்த விஷ்ணு பிரசாத் எம்.பி.,யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சமஸ்கிருத பெயரிலான மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற கோரி நீதிமன்ற புறக்கணிப்பு, உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, பேரணி உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை செய்து வருகிறோம்.இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை சட்ட ஆணையம், சட்ட அமைச்சகம், பார் கவுன்சில் , பார் அசோசியேஷன் ஆகியவை புறக்கணித்துள்ளன. புதிய சட்டங்களில் காவல்துறைக்கு அதிகாரத்தை மாற்றி, கீழமை நீதிமன்றங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சட்டங்கள் பற்றியும், அதன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 29ம் தேதி டில்லியில், தமிழக வழக்கறிஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று பேரணி நடத்த தீர்மானித்துள்ளனர்.வரும் குளிர்கால கூட்ட தொடரில் இந்த மூன்று குற்றவியல் சட்ட திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில், எம்.பி.,யாகிய தாங்கள் முன்வைக்குமாறு விருத்தாசலம் வழக்கறிஞர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட விஷ்ணு பிரசாத் எம்.பி., லோக்சபாவில் பேசுவதாக உறுதி அளித்தார்.இதில், வழக்கறிஞர்கள் செல்வபாரதி, அருள்குமார், சிவக்குமார், புஷ்ப தேவன், சங்க செயலாளர் சுரேஷ், சங்கரய்யா, ராம செந்தில், ஜெயஸ்ரீ, ஜென்னி, காயத்ரி, விஷாந்த், கிஷோர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் உடனிருந்தனர்.