| ADDED : ஜூலை 14, 2024 06:27 AM
கடலுார் : கடலுார் சிப்காட்டில் மெத்தனால் பயன்படுத்தும் கம்பெனிகளில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 66 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, மெத்தனால் பயன்படுத்தும் ரசாயன கம்பெனிகளை போலீசார் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.அதனையொட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., கோபி தலைமையிலான குழுவினர் நேற்று கடலுார் சிப்காட்டில் மெத்தனாலை பயன்படுத்தும் சோலாரா அக்டிவ் பார்மா, டாக்ரோஸ் கெமிக்கல் ஆகிய இரு கம்பனிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மெத்தனால் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. எப்படி பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய மெத்தனால் இருப்பு விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து மெத்தனாலை கம்பெனி பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு உத்தரவின்றி எக்காரணத்தை கொண்டும் மெத்தனால் வெளியில் செல்ல கூடாது என அறிவுறுத்தினர்.தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, மாவட்டத்தில் கள்ள மதுபானங்கள், கள்ளச்சாராயம் கடத்தல் முற்றிலும் தடுத்திட அதிரடி சோதனை நடத்த அறிவுருத்தினர்.பின்னர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், புதுச்சேரி மதுபாட்டிகள் கடத்தலை முற்றிலுமாக தடுக்க உத்தரவிட்டனர். அப்போது மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., சவுமியா, உதவி ஆணையர் சந்திரகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.