| ADDED : ஜூன் 30, 2024 04:49 AM
நெய்வேலி : நெய்வேலியில், என்.எல்.சி., நிறுவனம் சார்பில் துாய்மை பணிகள் பிரசாரத்தை, சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி துவக்கி வைத்தார்.நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் சென்னை மண்டல அலுவலகம் உள்ளிட்ட என்.எல்.சி.,யின் அனைத்து இதர திட்டங்கள் செயல்படும் பகுதிகளில் வெகுஜன தூய்மை பிரசாரம் நடந்தது. நெய்வேலி மெயின் பஜாரில் என்.எல்.சி சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி துாய்மை பணியை துவக்கி வைத்தார். சுரங்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, என்.எல்.சி., மக்கள் தொடர்புத்துறை செயல் இயக்குநர் பிரபு கிஷோர் ஆகியோர் தூய்மை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.நெய்வேலி நகரில் வெகுஜன துப்புரவு இயக்கம், மெயின் பஜாரில் உள்ள பல்வேறு இடங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், பொது மருத்துவமனை, என்.எல்.சி., தலைமை அலுவலகம், விஜிலென்ஸ் அலுவலகம் மற்றும் மத்திய தொழில்நுட்ப அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லுாரி மற்றும் அனைத்து பள்ளிகளின் மாணவ, மாணவியர் என, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.