உலக புகழ் பெற்ற நடராஜர் கோவிலை தன்னகத்தே கொண்ட பழமை வாய்ந்த நகரம் சிதம்பரம். இங்கு, பொதுமக்களின் தாகம் தீர்க்க, 1915 ம் ஆண்டு அண்ணாமலை செட்டியாரால், குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில்,சிதம்பரம் அருகே வக்காரமாரி என்ற இடத்தில், இரு மிகப்பெரிய குளம் வெட்டி அங்கிருந்து தண்ணீரை எடுத்து சுத்தம் செய்து, சிதம்பரம் நகருக்கு அனுப்பி, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கீழணையில் தேக்கப்பட்டு, அங்கிருந்து ராஜன் வாய்க்கால் மூலம், வக்காரமாரிக்கு கொண்டுவரப்படுகிறது. பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் தேக்கப்பட்டதால், வக்காரமாரி ஏரியை பொதுமக்கள் பிரவேசிக்காத வகையில், பாதுகாப்பிற்காக, ஒன்றிரண்டு முதலைகள் குளத்தில் விடப்பட்டது. காலப்போக்கில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், மற்றும் ஆறு, வாய்க்கால் குளங்களிலும் பிடிபடும் முதலைகளை, வனத்துறையினர், வக்காரமாரி குளத்தில் விடுவதையே வழக்கமாக கொண்டு வந்துள்ளனர். இந்த குளங்களில் சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் தற்போது இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, 2.30 கோடி ரூபாய் செலவில், வக்காரமாரி குளம் துார் வாரி, கரை அமைக்கும் பணி துவங்கியது. இதனால், அருகில் உள்ள மற்றொரு குளத்திற்கு, அனைத்து முதலைகளும் செல்ல ஏற்பாடு செய்து பாதுகாத்து வந்தனர்.ஒரு குளம் பணிகள் முடிந்து, அடுத்த குளத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் தற்போது துவங்கியது. இந்நிலையில், அந்த குளத்தில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட முதலைகளை காணாதது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.குளம் துார்வாரும் பணிகள் நடந்த நிலையில், மற்றொரு குளத்தில் விடப்பட்ட முதலைகள் வெளியேறி, கொள்ளிடம் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தஞ்சமடைந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. குளத்தில் இருந்து முதலைகள் வெளியேறாத வகையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க, வனத்துறை தவறியதால் இதுபோன்று, முதலைகள் வெளியேறியதாக புகார் எழுந்துள்ளது.சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், முதலை கடித்து, மதனிதர்கள் இறப்பு, கால்நடைகள் இறப்பு தொடர்ந்து வரும் நிலையில், வாக்காரமாரி குளத்தில் விடப்பட்ட முதலைகள் ஒட்டுமொத்தமாக எஸ்கேப் ஆகி இருப்பது, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.