விருத்தாசலம், : விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில், வயலுார் பகுதியில் உள்ள 90 சென்ட் நிலத்தினை விற்பனை செய்ய வேண்டி, அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் தரப்பினர், நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதற்கு, வழக்கறிஞர் மதுசூதனன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருதரப்பினர் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டதால், விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அய்யப்பன் தரப்பினர் நிலத்தினை விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்றதும், அதற்கு மதுசூதனன் தரப்பினர் தடங்கல் மனு கொடுத்ததும் தெரிய வந்தது.மாலை 6:00 மணி வரை தீர்வு ஏற்படாத நிலையில், சார் பதிவாளர் சபுரா பேகம் புறப்பட்டு சென்றார்.அதையடுத்து நேற்று காலை 9:30 மணியளவில், இருதரப்பினரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இது தொடர்பாக, மாவட்ட பதிவாளர் (பொறுப்பு) தனலட்சுமி முன்னிலையில் விசாரணை நடந்தது. அதில், ஒரு வாரம் அவகாசம் கொடுப்பதாகவும், (ஜூலை 2ம் தேதி) இரு தரப்பினரும் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி, நிரூபிக்க வேண்டும் எனவும், அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.இந்நிலையில், மாலை 6:00 மணிக்கு மேல், சென்னை ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றவில்லை என, கூறி, மாவட்ட பதிவாளரை கண்டித்து, அய்யப்பன் தரப்பினர், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட பதிவாளரை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, மற்றொரு தரப்பினர் உள்ளே புகுந்ததால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.