அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; குடியரசு கட்சியினர் கைது
கடலுார் : கடலுாரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய குடியரசு கட்சியினர் (அத்வாலே) 39 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் நகர அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழகம் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கவுதம சித்தார்த்தன், அம்பேத்கர் புரட்சி முன்னணி நிறுவனத் தலைவர் துரைராஜ் கண்டன உரையாற்றினர். இவர்களை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக டி.எஸ்.பி., பிரபு தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இதையடுத்து 39 பேரை, போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.