சிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள குளங்களை இணைக்க ரூ.48 கோடியில், புதிய திட்டம் தயாரிக்கப்படுவதாக, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சிதம்பரத்தில் இருந்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு, 17 புதிய பஸ்கள், புதிய வழித்தடத்தில் இயக்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன், சப் கலெக்டர் ராஷ்மி ராணி, நகரமன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், பாலமுருகன், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் பங்கேற்றனர்.பஸ்களை இயக்கி வைத்த வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு பள்ளியில் படித்து, கல்லுாரி போகும் பட்டதாரி பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் 9ம் தேதி துவங்க உள்ளார். இன்று, 6 கோடியே 56 லட்சம் மதிப்பில், 17 புதிய பஸ்கள், பல்வேறு புதிய வழித்தடங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்திற்கு 2023-24ம் ஆண்டில், 307 புறநகர பஸ்கள், 64 நகர பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய பஸ்களுக்கு மாற்றாக இதுவரை 184 புறநகர பஸ்கள், 28 நகர பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.சிதம்பரத்தில், அனைத்து குளங்களும் துார் வாரப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடைபயிற்சி செய்து ஆரோக்கியத்தை பெற்று வருகின்றனர். சிதம்பரத்தின் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களை இணைக்க, திட்டமிட கூறியுள்ளோம். மழை காலங்களில் தண்ணீர் வீணாகாமல் தேக்கவும், அனைத்து குளங்கள் சம அளவில் தண்ணீர் தேக்கவும், ரூ.48 கோடி மதிப்பீட்டில் குளம் இணைக்கும் பணி நடைபெற உள்ளது என, தெரிவித்தார்.விழாவில் பேரூராட்சி தலைவர்கள் பழனி, கணேசமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் குணசேகரன், கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன், வணிக துணை மேலாளர் ரகுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.