உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்

விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்

கடலுார்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் கல்லுாரிப் படிப்பிற்கு வழிகாட்டும் கல்லுாரிக் கனவு நிகழ்ச்சி நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறைகள், கல்லுாரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் வழங்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.விழாவில், கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பேசுகையில், 'பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால கனவினை நினைவாக்கும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றி பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லுாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்கள் குறித்து தொழில் வல்லுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மாணவர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படிக்க வேண்டும். மாநில அளவில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கடலுார் மாவட்டம் 22வது இடத்திற்கும், பத்தாம் வகுப்பில் 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு துணையாக இருந்த அனைத்து கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்' என்றார். அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, சி.இ.ஓ., பழனி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், தொழில்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி