| ADDED : ஆக 12, 2024 05:29 AM
கடலுார்: சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார். லால்புரம் பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்சன்குளம் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆயிகுளம் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் துார்வாரி பாதுகாப்பு வேலி அமைத்தல், பேவர் பிளாக் நடைபாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதை ஆய்வு செய்தார். மேலும் நாகச்சேரி குளம் மற்றும் ஓமக்குளம் வடிகால் வசதிகள், ஞானப்பிரகாசம் குளம், பாரதிதாசன் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் கட்டுமான பணி, சிதம்பரம் மேலரத வீதி மற்றும் தெற்குரத வீதியில் நவீன நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால், ஆகியவை குறித்து ஆய்வு செய்து அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்ஆய்வில் சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மிராணி, நகராட்சி ஆணையாளர் மல்லிகா, நகராட்சி பொறியாளர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.