| ADDED : ஆக 04, 2024 11:21 PM
கடலுார்:கடலுார் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் வீச்சரிவாளுடன் நடனமாடினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.அந்த இளைஞர்கள் வீச்சரிவாளுடன் பைக்கில் சென்று கம்பியம்பேட்டை பகுதியில் பொதுமக்களை மிரட்டினர். அவ்வழியாக பைக்கில் வந்த தி.மு.க., பிரமுகர் பிரகாைஷ வழிமறித்து கத்தியால் வெட்டினர். இதைப்பார்த்த பொதுமக்கள் திரண்டதால் கும்பல் தப்பியோடியது. படுகாயமடைந்த பிரகாஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, சென்னை சூர்யா, 26, விக்னேஷ், 26, ஆகியோரை கைது செய்தனர். சூர்யா தப்பியோட முயன்ற போது, தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. சூர்யா போலீஸ் பாதுகாப்புடன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த, 1ம் தேதி சூர்யா சிகிச்சை பெற்ற வார்டில் தன் பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பின்னர், வார்டில் இருந்த அனைவருக்கும் கேக் வழங்கினர். தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.