| ADDED : ஜூன் 15, 2024 05:50 AM
புதுச்சத்திரம்: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 7வது வார்டு பகுதிகளில், சுடுகாட்டு சாலைகள் அமைக்க வேண்டுமென, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 7வது வார்டில் சேந்திரக்கிள்ளை, தச்சக்காடு, அருண்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க., வை சேர்ந்த பாஸ்கர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். மேலக்குப்பம், சிண்ணாண்டிக்குப்பம் கிராமங்களிலும் சுடுகாட்டு பகுதிக்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை வயல் வழியாக எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்கள் உடலை, அடக்கம் செய்ய எடுத்துச் செல்வதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் தச்சக்காடு ஊராட்சிக்குட்பட்ட தச்சக் காடு ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல சுடுகாட்டுக்கு சாலைவசதி இல்லை. இதனால் இப்பகுதியில் இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்வதற்கு பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் மேற்கண்ட 3 கிராமங்களுக்கும், இப்பகுதி மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மேலக்குப்பம், சின்னாண்டிக்குப்பம், தச்சக்காடு ஆதிதிராவிடர் பகுதிகளில் சுடுகாட்டு சாலைகளை அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 7வது வார்டு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.