| ADDED : மார் 23, 2024 11:59 PM
திட்டக்குடி: திட்டக்குடி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதி மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.இதையடுத்து தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாகன தணிக்கை, கட்சி கொடிக்கம்பங்கள், சின்னங்களை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்றன.ஆனால், திட்டக்குடி தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் மந்தமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.தொகுதியில் தங்கி கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், தொலைவிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு மதியம் 12:00 மணிக்கு மேல் திட்டக்குடிக்கு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஒப்படைப்பதற்கு கூட முறையாக அதிகாரிகள் இல்லாமல், அலுவலகத்தில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கும் அவலம் உள்ளது.பல இடங்களில் கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளை அகற்றிய அதிகாரிகள், கட்சி நிறங்களுடன் நிற்கும் கொடிக்கம்பங்களை அகற்றாமல் உள்ளனர்.திட்டக்குடி தாலுகா அலுவலகத்திலேயே காமராஜ், அண்ணாதுரை உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மேலும், திட்டக்குடி பகுதியில் வாகன தணிக்கை செய்வதிலும் அதிகாரிகள் மந்தமாக செயல்படுகின்றனர். மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் நடப்பவைகளை தேர்தல் அலுவலர் முறையாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.