விருத்தாசலம்: விருத்தாசலம் கஸ்பா ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம், கஸ்பா ஏரி, 278 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மணிமுக்தாற்றில் உள்ள மேமாத்துார் அணைக்கட்டு பாசன வாய்க்கால் வழியாக நீர்ப்பிடிப்பு கிடைக்கிறது. மேலும், வடகிழக்குப் பருவ மழையின்போது எளிதில் ஏரி நிரம்பி விடும்.இந்த ஏரி தண்ணீரை ஆதாரமாக கொண்டு. விருத்தாசலம் பகுதியில் 584 ஏக்கர் விளை நிலங்களும், ஆலிச்சிகுடி உள்ளிட்ட கிராமங்ளில் 508 ஏக்கர் பரப்பளவிலும் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த 2011ம் ஆண்டில், ஏரியின் நடுவே, விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை போடப்பட்டது.இதனால, ் சாலையின் இருபுற கரைகள் மட்டுமல்லாது ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை தனிநபர் ஆக்கிரமிக்க துவங்கினர். வீடுகள் கட்டப்பட்டும், காலியான இடத்தில் குப்பைகள் கொட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது. மேலும், கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டி, மலைபோல குவிந்துள்ளனர்.இதனால் ஏரியின் பரப்பளவு குறைந்து கஸ்பா ஏரி குட்டைபோல மாறியுள்ளது. இதில் கோரை புற்கள், ஆகாய தாமரைகள், முட் செடிகள் அதிகளவு மண்டி, துார்ந்துள்ளது. இதனால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வண்டல் மண் எடுக்கும் பணிக்கு கஸ்பா ஏரி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் ஏரி துார்வாரப்பட்டு, நீர்ப்பிடிப்பு அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புறவழிச்சாலையின் ஓரமாக ஏரியின் கரையை குடைந்து வண்டல் மண் அள்ளப்பட்டது.விதி மீறலாக நடந்த இப்பணியை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏரியின் முகப்பு பகுதிகள் ஆழம் நிறைந்தும், மற்ற பகுதிகள் துார்ந்தும் கிடக்கிறது. தற்போது, நீர்ப்பிடிப்பு குறைந்து, கால்நடைகள் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது.எனவே, விருத்தாசலம் கஸ்பா ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை ஆழப்படுத்த வேண்டும். மேமாத்துார் அணைக்கட்டு பாசன வாய்க்கால்களை துார்வாரி முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு ஏற்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.