உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 350 ஏக்கர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

350 ஏக்கர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால் பாசன வாய்க்கால் மாயமானதால், 350 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை இடையே, 47 கி.மீ., தொலைவிற்கு 200 கோடி ரூபாயில், மாநில சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக, மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, பாலங்கள் அகலப்படுத்தும் பணிகள் நடந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த இப்பணியின்போது, விருத்தாசலம் அடுத்த கார்குடல், கம்மாபுரம், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலையை அகலப்படுத்தி, புதிதாக கல்வெர்டுகள், தடுப்புகள் போடப்பட்ட ன. அப்போது, விருத்தாசலம் அடுத்த கார்குடல், கம்மாபுரம் பகுதிகளில் பாசன வாய்க்கால்களை துார்வாராமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும், அப்பகுதியில் வாய்க்காலை மறைத்து, பயணிகள் நிழற்குடை, கடைகளின் முகப்பில் சாலைகள் போடப்பட்டு விட்டன. இதனால், சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பாசன வாய்க்கால் இல்லாது மழைநீர் முழுவதுமாக கார்குடல் கிராமத்திற்குள் நுழைந்து, விளைநிலங்கள், குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி, பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கார்குடல் விவசாயிகள் கூறுகையில், 'வி ருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால் பாசன வாய்க்காலை துார்த்து, நிழற்குடை கட்டப்பட்டது. இதனால், புதுக்கூரைப்பேட்டை, மாவிடந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், வடிகால் இல்லாது சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, துார்ந்து கிடக்கும் பாசன வாய்க்காலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விளைநிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை