உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலை உணவு திட்டம்: 6,711 மாணவர்கள் பயன் வடலுாரில் அமைச்சர் தகவல்

காலை உணவு திட்டம்: 6,711 மாணவர்கள் பயன் வடலுாரில் அமைச்சர் தகவல்

வடலுார் : 'மாவட்டத்தில், 6,711 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயனடைவர் என' அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்ட துவக்க விழா வடலுார், பார்வதிபுரம் ஆர்.சி., துவக்கப் பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவிற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் 4.5 லட்சம் குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை பெறுகின்றனர். முதியோர் ஓய்வூதிய தொகை, 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால், 1.4 லட்சம் முதியோர் பயனடைகின்றனர். மொத்தம், 7.78 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள இம்மாவட்டத்தில், 5.90 லட்சம் கார்டுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை, 162 முகாம்களில், 69 ஆயிரத்து 828 பேருக்கு, 13 ஆயிரத்து 709 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. முதல்வரின் காலை உணவு திட்டத்தில் இதுவரை, 1365 பள்ளிகளில், 53 ஆயிரத்து 255 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது திட்டத்தின் விரிவாக்கமாக, 64 பள்ளிகளில், 6,711 மாணவர்கள் பயனடையவர். மாவட்டத்தில் மொத்தம், 1429 பள்ளிகளில், 59 ஆயிரத்து 966 மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். வடலுார் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகராட்சி நிர்வாக துறை மண்டல இயக்குநர் லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !