| ADDED : செப் 04, 2011 11:07 PM
சிதம்பரம் : ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் தனி நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் 3,000க்கும் அதிகமான துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 300க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் உள் ளன. ஆதிதிராவிட மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் இந்த ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் நடைபெறும் கல்வி நிறுவனங்களில் கல்வி தரத்தினை உயர்த்துவதற்கான போதிய நிர்வாக அமைப்பு இல்லை. இக்கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடவும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி பயிற்சி அளிக்கும் வகையில் கல்வி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இல்லை. எனவே இத்துறையில் கீழ் உள்ள கல்வி நிலையங்ளை கண்காணிக்கவும், ஆசிரியர் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயிற்சிகள், கல்வி பயிற்றுவித்தலுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தனி கல்வி இயக்குனரகம் உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், இத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் இடர்பாடுகளை களைந்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.