குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
புதுச்சத்திரம்: பெரியப்பட்டில் பொது குளத்தில் கழிவு நீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில், ஊருக்கு பொதுவான குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கரும காரியம் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தில் மீன்கள் அதிகளவில் இருந்தன. இந்நிலையில் திடீரென குளத்தில் இருந்த மீன்கள் நேற்று செத்து மிதந்தன. குளத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததாக கூறப் படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மோட்டார் மூலம் குளத்தில் உள்ள நீரை அகற்றி, மீன்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.