உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /   பயிர் காப்பீடு திட்டத்தில்... பாரபட்சம்: குறைகேட்பு கூட்டத்தில் புகார்

  பயிர் காப்பீடு திட்டத்தில்... பாரபட்சம்: குறைகேட்பு கூட்டத்தில் புகார்

கடலுார்: பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு பாரபட்சத்துடன் வழங்கப்படுகிறது என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது: மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் இரிகோ நிறுவனம் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டை முழுமையாக வழங்காமல் பாரபட்சத்துடன் வழங்கியிருக்கிறது. அறுவடை மகசூல் அடிப்படையில் ஒரே கிராமத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு பல வகையான தொகையை வரவு வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் மூலம் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மாவட்டம் முழுதும் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. பரங்கிப்பேட்டை வி.பஞ்சாங்குப்பம் கிராமத்தில் ஐ.எப்.எஸ்.எல்., நிறுவனத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்ல ரயில் பாதை அமைத்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கிறது. விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே கொத்தட்டை கொங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாகூர் அருகே மூன்றாவது டோல்கேட் அமைப்பதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது 70 கி.மீ., துாரத்தில் ஒரு டோல்கேட் என்ற விதியை மீறி அமைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்க்கடி, பாம்பு கடியால் இறந்த விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். தொடர்ந்து கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், 'மாவட்டத்தில் தற்போது யூரியா 3,324 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,373, பொட்டாஷ் 1,463 காம்ப்ளக்ஸ் உரம் 6,262, சூப்பர் பாஸ்பேட் 1,358 மெட்ரிக் டன் என மொத்தம் 13 ஆயிரத்து 2 மெட்ரிக் டன்கள் இருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் 113 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 91 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும், 22 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண காப்பீட்டுத் தொகை விபரங்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா குறித்த கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. பயிர்களுக்கான இழப்பீடு தொகை காலதாமதமின்றி வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கீழ்அருங்குணம், பாலக்கொல்லை, லால்பேட்டை, சாத்தப்பாடி உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாராம்பரிய அரிசி விளைபொருட்களின் முதல் விற்பனை துவங்கி வைக்க ப்பட்டுள்ளது' என்றார். கூட்டத்தில், சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி, 200 விசாயிகளுக்கு அத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன், இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, நேர்முக உதவியாளர் (விவசாயம்), கதிரேசன், மேலாண்மை இயக்குநர் சொர்ணலட்சுமி வட்டாரங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை