| ADDED : டிச 06, 2025 06:23 AM
விருத்தாசலம்: மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் காணப்படும் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். அவரது செய்திக் குறிப்பு: கடலுார் மாவட்டம், கடலோர பகுதியாகஇருப்பதால், வடகிழக்குபருவ மழை அதிகளவில் பெறுகிறது. கடந்த வாரத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மழைநீர் தேங்கிய நெல் வயல்களில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மழைநீர் முழுவதும் வடிந்த உடன் கூடுதலாக தழைச்சத்து எக்டருக்கு, 20 கிலோ என்ற அளவில் மேல் உரமாக இடவேண்டும். தற்போது நிலவி வரும் காலநிலையால் நெற்பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய், குலைநோய், கதிர் உறை அழுகல் நோய், நெல் மணி நிறமாற்ற நோய்கள், இலைச்சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்க அதிக வாய்ப்புள்ளது. இலை கருகல் நோய் இதைகட்டுப்படுத்த 20 சதவீதம் பசு சாணக்கரைசலை நோய் தாக்குதல் தென்பட்டவுடன் தெளிக்க வேண்டும். குலைநோய் குலைநோய் நெற்பயிர்களில் தாக்கினால், இதனை கட்டுப்படுத்த டிரைசைக்ளோசோல் 75 சதவீதம் டபிள்யூ.பி., (500 கிராம்/எக்டர்) அல்லது கார்பன்டசிம் 50 சதவீதம் டபிள்யூ.பி., (500 கிராம்/எக்டர்) என்ற அளவில் தெளிக்கலாம். இலை உறை அழுகல் நோய் இலை உறை அழுகல் நோயை கட்டுப்படுத்த கார்பண்டசிம் (500 கிராம்/எக்டர்) அல்லது ஹெக்சாகோனசோல் 75 சதவீதம் டபிள்யூ.ஜி., (100 மி.கி/லிட்டர்) என்ற அளவில் தெளிக்கலாம். ஆனைக்கொம்பன் நிறைய பகுதிகளில், ஆனைக்கொம்பன் தாக்குதல் பரவலாக காணப்படுகின்றது. இதனால் தண்டுப்பகுதியானது வெங்காய தாழ்கள் போன்று காட்சியளிக்கும். இப்பூச்சியைக் கட்டுப்படுத்த பிப்ரோனில், 5 சதவீதம் எஸ்.சி., (1250 மி.லி/எக்டர்) அல்லது தயாமீதாக்சம் 25 சதவீதம் டபிள்யூ., ஜி., (100 கிராம்/எக்டர்) என்ற அளவில் தெளிக்கலாம். மேலும் தொடர்புக்கு 04143-238353 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.