உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டத்தில் முன்னுரிமை பின் தங்கிய பகுதி விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டத்தில் முன்னுரிமை பின் தங்கிய பகுதி விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

கடலுார்: தமிழகத்தில் முதல்வரின் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் கீழ், பின்தங்கிய கிராமப்பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபின் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார்.அதன்படி 234 சட்டசபை தொகுதிகளில், 61 தொகுதிகளில் ஸ்டேடியங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முதல் கட்டமாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி, துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி மற்றும் வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம், ஆலங்குடி, காரைக்குடி தொகுதிகளில் தலா மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் துவங்கியது. இரண்டாம் கட்ட பட்டியலில் உத்திரமேரூர், மேட்டூர், கீழ்பென்னாத்துார், கலசப்பாக்கம், கீழ்வேளூர், தாராபுரம், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, கும்பகோணம், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலுார், திண்டுக்கல்-ஆத்துார், ஒட்டன்சத்திரம், சேலம்-ஆத்துார், ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம், மொடக்குறிச்சி, பண்ருட்டி ஆகிய 19 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.மார்ச் முதல் வாரத்தில் நடந்த விழாவில் சேப்பாக்கம், காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கட்டி முடிக்கப்பட்ட மினி ஸ்டேடியங்களை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'முதல்கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட தொகுதியில் மினி ஸ்டேடியங்கள் கட்டும் பணி நடக்கிறது.இரண்டாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட இடங்களில் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது' என்றார். மூன்றாம் கட்டமாக சட்டசபை கூட்டத் தொடரில் காட்டுமன்னார்கோவில் உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளில் நடப்பாண்டில் 120 கோடி ரூபாய் மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.இதுகுறித்து முன்னாள் விளையாட்டு வீரர்கள் கூறுகையில், 'விளையாட்டை ஊக்குவிக்கக்கூடிய மினி ஸ்டேடியம் திட்டம் சிறப்பானது.தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நிறைவுபெறும் நாளில், தமிழக வீரர்கள் பல்வேறு பிரிவு விளையாட்டுகளில் வெற்றியை குவிப்பார்கள்.அதிலும் மிகவும் பின்தங்கிய, போதிய வசதிகள் கிடைக்காத தொகுதிகளில் மினிஸ்டேடியங்கள் அமைப்பதன் மூலம் அப்பகுதியில் உள்ள திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.இதன் மூலமாக இளம் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.

மினி ஸ்டேடியம் 'மிஸ்சிங்'

மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி தொகுதி வழுதலம்பட்டு கிராமத்திலும், பண்ருட்டி தொகுதி காடாம்புலியூர் கிராமத்திலும் மினி ஸ்டேடியம் கட்ட இரண்டாம் கட்ட பட்டியலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்குவதில் தாமதம் நிலவுகிறது. மூன்றாம் கட்ட பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதி இடம் பெற்றுள்ளது. கடலுாரில் அண்ணா விளையாட்டரங்கம், விருத்தாசலத்தில் மினி ஸ்டேடியம் உள்ளது. மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மிகவும் பின்தங்கிய தொகுதியான திட்டக்குடியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள், வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசுக் கல்லுாரிக்கு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மினிஸ்டேடியம் அமைக்க வேண்டும் என மனுவும் அளித்தனர். ஆனால், மூன்றாம் கட்ட பட்டியலிலும் திட்டக்குடி தொகுதி இடம் பெறாததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அமைச்சர் கணேசனின் சொந்த தொகுதியான திட்டக்குடியில் மினிஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ