4 ஆண்டாக நுாலகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர் கடும் அவதி
திட்டக்குடி அடுத்த அருகேரி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 40 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியில் உள்ளனர். பள்ளி வகுப்பறை கட்டடம் சேதம் அடைந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதன் பின் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட எவ்வித பணிகளும் துவங்கவில்லை. அதே பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான கிராமப்புற நுாலகத்திற்கு மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் சூழல் உள்ளதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, அருகேரியில் கிடப்பில் போடப்பட்ட வகுப்பறை கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.