உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்துயிர் பெறும் டேவிட் கோட்டை: வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி

புத்துயிர் பெறும் டேவிட் கோட்டை: வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கடலுாரில் உள்ள 400 ஆண்டு கால பழமையான ஆங்கிலேயர் காலத்து கோட்டையை புனரமைக்கும் முயற்சி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழமண்டல கடற்கரையில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த டச்சுக்காரர்கள், கடந்த கி.பி.,1608ம் ஆண்டு செஞ்சி மன்னர்களின் அனுமதியை பெற்று சிறிய கோட்டையை கட்டினர். பின் கடந்த, கி.பி., 1677ல் செஞ்சிக்கோட்டையை சிவாஜி கைப்பற்றியதும், இந்த கோட்டையும் மராத்தியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மராத்தியர்களிடமிருந்து கடந்த,1690ல் ஏலம் மூலம் ஆங்கிலேயர்கள் விலைக்கு வாங்கினர். இக்கோட்டைக்கு ஆளுநரான எலிகு யேல், புனித டேவிட் கோட்டை எனப்பெயரிட்டார். கோட்டைக்குச்சொந்தமான பகுதியை முடிவு செய்ய, கோட்டையிலிருந்து அனைத்துத்திசைகளிலும், வானை நோக்கி பீரங்கி குண்டுகளை சுட்டனர். பீரங்கி குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இன்றும் அந்த கிராமங்கள் குண்டுசாவடி, குண்டுசாலை, குண்டுஉப்பலவாடி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. பின் கடந்த, கி.பி., 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக கோட்டை விரிவுபடுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட்டது. கி.பி.,1746ம் ஆண்டு முதல் 1752 வரை இக்கோட்டை, ஆங்கிலேயரின் தென்னிந்தியாவிற்கான தலைமையகமாக செயல்பட்டது. கி.பி.,1758 மற்றும் 1782ம் ஆண்டுகளில் இக்கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வசப்படுத்தினர். இறுதியாக கி.பி.,1785ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இக்கோட்டையை கைப்பற்றி, தாக்குதல்களால் சேதமடைந்த கோட்டையை சீரமைத்தனர். இத்தகவல்கள் அடங்கிய கல்வெட்டு கோட்டை வாயிலில் இன்றளவும் உள்ளது. அதன்பின், சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயரின் தலைமையகமாக மாறியதால், செயின்ட் டேவிட் கோட்டை முக்கியத்துவம் இழந்தது. கோட்டையின் பல்வேறு இடங்களில் வணிக நோக்கத்திற்காகவும், போக்குவரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் வவ்வால்கள், விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி இருந்தது. கோட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கேப்டன் ஹவுஸ் என்றழைக்கப்படும் மாலுமிகளுக்கான கேளிக்கை விடுதி உள்ளிட்ட கட்டடங்கள் பராமரிப்பில்லாமல் பழுதடைந்து காணப்பட்டது. கெடிலம் ஆற்றின் கரையில் இயற்கை அழகு நிறைந்த சூழலில் உள்ள வரலாற்று சின்னமான செயின்ட் டேவிட் கோட்டையை, தமிழக அரசு பாதுகாப்பதுடன், சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் கடற்கரை அருகிலுள்ள டேவிட் கோட்டையை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதையடுத்து புதர் மண்டிக்கிடந்த டேவிட் கோட்டையின் பகுதிகள் துாய்மை படுத்தப்பட்டுள்ளது. 400 ஆண்டு கால வரலாற்றுப் பெருமை வாய்ந்த டேவிட் கோட்டை புனரமைக்கப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை