வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.ஐ., தேர்விற்கு இலவச பயிற்சி
கடலுார்: கடலுார் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 16ம் தேதி துவங்கப்படுகிறது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1299 சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை கல்வித்தகுதியாக பெற்றிருக்க வேண்டும். 1.7.2025ல் 20 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். இத்தேர்விற்கு 7.4.2025 முதல் 3.5.2025 வரை www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ம் தேதி முதல் துவங்கிறது.பயிற்சி வகுப்பு திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பயிற்சி வகுப்புகளில் வாரத்தேர்வுகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படவுள்ளன.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.