சிதம்பரம்: சிதம்பரத்தில், போலீசாரை வெட்டி தப்பி செல்ல முயன்ற கஞ்சா வியாபாரி, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் சில மாதங்களுக்கு முன், 20 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில், வல்லம்படுகையை சேர்ந்த நவீன், 24, தலைமறைவானார். நேற்று முன்தினம் இரவு, அண்ணாமலை நகர் போலீசார் ரோந்து சென்றபோது, ஒரு கிலோ கஞ்சாவுடன் சிலரை பிடித்தனர். இதில், தலைமறைவாக இருந்த நவீன் உட்பட, 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவீன் அளித்த தகவலில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார், நவீன் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை எடுக்க சிதம்பரம், மாரியப்பா நகரில் உள்ள ஒரு புதர் பகுதிக்கு நேற்று காலை அவரை அழைத்துச் சென்றனர். அப்போது, நவீன் அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காவலர் அய்யப்பனை வெட்டியதோடு, மற்றவர்களையும் வெட்டி தப்ப முயன்றார். சுதாரித்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தற்காப்புக்காக, தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனின் கால் முட்டியில் சுட்டார். இதில், ரத்தம் வழிந்த நிலையில் நவீன் சுருண்டு விழுந்தார். போலீசார், நவீனையும், காயமடைந்த அய்யப்பனையும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அய்யப்பன் உடல்நலம் குறித்து விசாரித்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் கூறியதாவது: நவீன் மீது 9 வழக்குகள் உள்ளன. அண்ணாமலை நகரில் கஞ்சா, அடிதடி என, ஐந்து வழக்குகள், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, ஆணைக்காரன் சத்திரம், சென்னை, வேளச்சேரியிலும் நவீன் மீது வழக்குகள் உள்ளன. கஞ்சா தொடர்பாக கடலுார் மாவட்டத்தில் இதுவரை, 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆறு மாதங்களுக்கு முன், இதே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், கொள்ளை வழக்கு குற்றவாளி ஸ்டீபன் என்பவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது, சுட்டு பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.