சிதம்பரத்தில் வரும் 15ம் தேதி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு
கடலுார்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் I மற்றும் அ-பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில் 6,473 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டம், சிதம்பரம் மையத்தில் வரும் 15ம் தேதி முற்பகல் மட்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி - I மற்றும் அ-பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. சிதம்பரத்தில் 13 பள்ளி மற்றும் கல்லுாரிகளில் 25 தேர்வு கூடங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் 6,473 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும் இத்தேர்வினை கண்காணிப்பதற்காக இரண்டு பறக்கும் படைகள் 4 நடமாடும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9.00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.00 மணிக்கு பிறகு வருகைபுரியும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும். தவறும் பட்சத்தில் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை,கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தேர்வுக்கூடத்திற்கு கொண்டுவர வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.