கடலுார்: கடலுாரில் ரூ. 4. 43 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய தீயணைப்புத் துறை அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கடலுார் பீச் ரோட்டில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகம் 1942ல் கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடம் கட்ட கடந்த 2020-21ம் ஆண்டு, ரூ. 4 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், புதிய அலுவலகம், 5 தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், மாவட்ட அலுவலர் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டன. கட்டுமான பணிகள் 2022 பிப்ரவரியில் துவங்கி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிக்கப்பட்டது.புதிய ஒருங்கிணைந்த தீயணைப்புத் துறை அலுவலகத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது கடலுார் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் கிரேசி லிவிங்ஸ்டன், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் குமார், அலுவலர்கள் விஜயக்குமார், ஆறுமுகம் மற்றும் தியணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிறப்பு பூஜை
கடலுாரில் தீயணைப்பு துறை புதிய கட்டட திறப்ப விழாவையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை அலுவலகத்தில் குண்டம் அமைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் யாக பூஜை செய்தது, அரசு மட்டத்திற்கு தெரியக்கூடாது என்பதற்காக, சிறப்பு பூஜை செய்த கட்டடத்தை அதிகாரிகள் பூட்டி வைத்திருந்தனர். மற்ற கட்டடங்கள் திறந்து இருந்தன.