விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி
விருத்தாசலம் : விருத்தாசலம் நகரில் சாலைகளை விரிவுபடுத்தியும் போக்குவரத்து பாதிக்கும் வகையில், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமமடைந்து வருகின்றனர். கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. அரசு மற்றும் தனியார் பஸ், கார், வேன் மட்டுமின்றி கடலுார் துறைமுகம், என்.எல்.சி., நிறுவனம், தனியார் சிமென்ட், சர்க்கரை ஆலைகள், சேலம் இரும்பு உருக்காலை போன்ற பெரு நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் செல்கின்றன. அதிக வாகன போக்குவத்து காரணமாக, கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 275 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுபோல், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 22 கி.மீ., சாலை, 136 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், நகரின் பிரதான ஜங்ஷன் சாலை, பெண்ணாடம் ரோடு, தென்கோட்டைவீதி உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சிறப்பு திட்டங்கள் மூலம் இருபுறம் பிளாட்பாரம் வசதியுடன் அகலப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வர முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக கடைகளின் முகப்பு ெஷட், விளம்பர பலகைகள், ராட்சத டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர போர்டுகள், பேனர்கள் வைத்துள்ளதால் அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையின் குறுக்கே நிறுத்தும் அவலம் தொடர்கிறது. அவ்வப்போது, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் இணைந்து, கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வாடிக்கையாகி விட்டது. பின்னர், ஓரிரு நாட்களில் மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பது தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. எனவே, விருத்தாசலம் நகர பிரதான சாலைகளில் முளைத்துள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிட அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.