கடலுார்: கடலுார் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு வந்த விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணியில் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவச மாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலை யிலும் வழங்கப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என, 10 தாலுகாக்களில் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 7 லட்சத்து 89 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில், மாவட்டத்தில் தாலுகா வாரியாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொது விநியோக திட்ட இணையதளத்தில் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, திருமணச் சான்று, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது, ஆதார் எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.பின், விண்ணப்பதாரரின் முகவரியில் உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, தனி அறையில் வசிப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வர். பின், ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் வழங்கப்படும்.மாவட்டத்தில் ரேஷன் கார்டு கேட்டு கடந்த மே மாதம் வரை 9,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் முகவரியில் இம்மாதம் முதல் அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று சான்றிதழின் உண்மை தன்மை குறித்து கள ஆய்வு செய்து வருகின்றனர்.இப்பணிகள் இம்மாதத்தில் முடிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.