| ADDED : ஜன 06, 2024 06:17 AM
புவனகிரி பெருமாத்துாரைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா, 35; கத்தாழை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த கொரோனா காலத்தில் இணைய வழி கல்வி வானொலியை (www.kalviradio.com) வடிவமைத்தார்.மாணவர்கள் சுயமாக தனித்திறன்கள், கற்றல் மற்றும் வாசிப்பு திறனில் சிறந்துள்ளனர். இது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 1,500 ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். 3.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடியோ பதிவுகள் இடம் பெற்றுள்ளன.இந்த ஆசிரியரின் செயலுக்கு அப்போதைய தலைமைச் செயலர் இறையன்பு பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கல்வித்துறை அமைச்சர், இயக்குனர், இணை இயக்குனர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.இந்த சேவையை 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் வசதியுடன், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் தங்கள் மாணவர்கள் பங்கேற்கும் நோக்கில் மாவட்டம் வாரியாக ஆசிரியர்களுக்கென தனித்தனி வலைப்பக்கம் உருவாக்கி மாணவர்களின் படைப்புகளை பதிவேற்றி வருகின்றனர்.தனித்தனி வலைப்பக்கத்தை 'க்யூஆர்' கோடாக மாற்றி மாணவர்களின் ஆடியோக்களை கேட்க முடிகிறது.இந்த பயன்பாடு மற்றும் அனுபவம் குறித்து பல்வேறு மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் கார்திக்ராஜாவிற்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளனர்.தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் அரசு பள்ளி பல்வேறு கலை நுணுக்கங்களில் சிறந்துள்ளதாக கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.