| ADDED : ஆக 18, 2024 11:38 PM
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இதனை முறையாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தினால் மட்டுமே பருவ மழைநீரை வீணடிக்காமல் சேமிக்க முடியும்.அதுபோல், வெள்ள காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலக்காமல், நீர்நிலைகளில் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும்.இதனை கருத்தில் கொண்டு ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்கப்படுகிறது. இவ்வகை ஏரி, குளங்கள் மாவட்ட நிர்வாக அரசிதழில் இடம் பெற்றிருக்க வேண்டும்.அதுபோல், வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு அனுமதி கோரும் நபர்களின் சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த வி.ஏ.ஓ., தாசில்தார் மூலம் சரிபார்த்து பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. குறிப்பாக மண்பாண்ட தொழிலுக்கு அனுமதி கோருவோருக்கும் தாசில்தார் வாயிலாக அனுமதி தரப்பட்டது.இதற்காக ஏரி, குளங்களில் மண் எடுக்க குறிப்பிட்ட அளவீடுகள் நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்களில் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய பயன்பாட்டிற்கு மாறாக வீடுகள், தெருக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படும் வகையில் விளைநிலங்களில் கொட்டி விற்பனை செய்கின்றனர்.இதனால் ஏரி, குளங்களின் முகப்புகளில் ராட்சத அளவில் பள்ளங்கள் உருவாகி, சிறுவர்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், கிராமப்புற இளைஞர்கள் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. இதனால் நீர்நிலைகளை துார்வாரும் அரசின் தொலைநோக்கு திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, மாவட்டத்தில் விதிமுறை மீறிய பகுதிகளில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அள்ளிச்சென்ற மண்ணை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.