| ADDED : பிப் 06, 2024 04:10 AM
கடலுார் : நுாறு நாள் வேலையில் கூலி உயர்ந்துள்ள நிலையில், பெண் தொழிலாளர்கள் அவ்வேலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கிராம பகுதிகளில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல்விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005ல் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தில் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் பணி செய்கின்றனர். கிராமப் புறங்களில் பாசனம், சாலை அமைத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட 29 விதமான பணிகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது, அரசின் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.இந்த வேலைத் திட்டத்தின் காரணமாக நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறத்திற்கு வரும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால், இது முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சிறு-குறு விவசாயக் குடும்ப பெண்களும் இவ்வேலையின் மூலம் வருமானம் பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 200 ரூபாயாக இருந்த கூலி தற்போது படிப்படியாக 294 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கூலி உயர்வால் நுாறு நாள் வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மகளிர் திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் யார் என கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு நுாறு நாள் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால் நுாறு நாள் வேலையில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள நிலையில், பெண் கூலித்தொழிலாளர்கள் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது பயிர் செய்துள்ள நெல், வெங்காயம், மக்காசோளம், வேர்க்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்துவிட்டு விவசாய கூலியாட்கள் தட்டுப்பாட்டால் களைமண்டி விவசாயம் மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்கறி செடிகளில் சிலர் களையை எடுக்காமல் விட்டுவிடுவதும் உண்டு. அதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி, மாற்றுபயிராக மரப்பயிர்களுக்கு விவசாயிகள் மாறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கூலி ஆட்கள் இல்லாமல் இயந்திரம் மூலம் நாற்று நடுவது முதல் அறுவடை செய்வது வரையிலான பயிர்களை சாகுபடி செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.