தரிசு நிலங்கள் தனி நபர் பெயரில் பட்டா ரத்து செய்து நில நிர்வாக ஆணையர் உத்தரவு
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் தரிசு நிலங்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்திட நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பத்திரக்கோட்டை கிராமத்தில் இருந்த 186 ஏக்கர் பரப்பளவிலான தரிசுநிலத்தினை கடந்த 1972ம் ஆண்டு தனி நபர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாற்றியுள்ளனர்.இதுகுறித்து சிலம்பிநாதன்பேட்டைஊராட்சி தலைவர் தெய்வானை சிங்காரவேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், நில நிர்வாக ஆணையர் பழனிசாமி செய்திக்குறிப்பு:கலெக்டர் அறிக்கை, வருவாய் ஆவணங்கள் படி 186 ஏக்கர் நிலத்தில் வண்டி பாதையை தவிர்த்து மீதமுள்ள 178.82 ஏக்கர் பரப்பளவு இடத்தினை தவறாக தனி நபர்களுக்கு பட்டாமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த சர்வே எண்ணில் உள்ள புன்செய் நிலங்களுக்கான உட்பிரிவுகள் மற்றும் பட்டாவினை ரத்து செய்தும், 1924ம் ஆண்டு 'அ' பதிவேட்டில் உள்ளவாறு தரிசு என வருவாய் ஆவணங்களில் பதிவு செய்திட கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது.வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்து அது தொடர்பான விபரத்தினை 15 நாட்களுக்குள் நிலநிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அறிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.