உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 50,124 மனுக்கள் பெறப்பட்டது அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
குறிஞ்சிப்பாடி: கடலுார் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்'' திட்டத்தின் கீழ் 50,124 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மற்றும் வடலுார் நகராட்சி பகுதிகளில் ரேஷன் கடை திறப்பு, பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட முடிவுற்ற 10.07 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின், அவர் பேசுகையில், 'மாணவர்களுக்கு கல்வி எளிதில் கிடைக்கவும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவும் ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கடலுார் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்'' திட்டத்தின் கீழ் 118 முகாம்கள் நடத்தப்பட்டு, 50,124 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி, 33, 600 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் குறிஞ்சிப்பாடி, திட்டக்குடியில் 1,947 பேர் பயனடைந்துள்ளனர்' என்றார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.